கேரள உயர் நீதிமன்றம், விபச்சார இல்லத்தில் உடலுறவுக்கு பணம் செலுத்துவது, விபச்சாரத்தை தூண்டுவதாகவே கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது. இது ஒரு சாதாரண வாடிக்கையாளர் பரிவர்த்தனையாக கருத முடியாது என்று நீதிபதி வி.ஜி. அருண் தெளிவுபடுத்தினார்.
கடந்த 2021-ல் காவல்துறை ரெய்டில் சிக்கிய ஒருவரின் மனுவை விசாரித்தபோது, விபச்சாரிகளை ‘பொருளாக’ கருத முடியாது என்றும், பணம் செலுத்துவது ‘தவறான பாலியல் நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்’ (Immoral Traffic Prevention Act) கீழ் தூண்டுதலாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பு, சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றம், மனுதாரர் மீதான பிரிவு 3 மற்றும் 4 குற்றச்சாட்டுகளை ரத்து செய்தாலும், பிரிவு 5(1)(d) மற்றும் 7-ன் கீழ் விசாரணை தொடர அனுமதித்தது. விபச்சாரத்திற்கு தூண்டுவோரை தண்டிக்கவும், இந்த அமைப்பை தவறாக பயன்படுத்துவோரை குற்றவாளிகளாக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாக நீதிபதி வலியுறுத்தினார்.
விபச்சாரத்தில் ஈடுபடுவோரை ‘வாடிக்கையாளர்’ என்று அழைப்பது, இந்த சட்டத்தின் நோக்கத்தை புரட்டிப்போடுவதாக உள்ளது என்று கூறிய நீதிமன்றம், வற்புறுத்தப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுவோரை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது. இந்த தீர்ப்பு, மனித கடத்தல் மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான ஒரு படியாக பார்க்கப்படுகிறது.
