மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட், எல்ப்ரோ மாலில் ‘தி கான்ஜுரிங் – லாஸ்ட் ரைட்ஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டபோது,  இருவர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஷிக் என்ற இளைஞர், தனது மனைவியுடன் படம் பார்க்க வந்திருந்தார்.

படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் குறித்து தனது மனைவியிடம் உரத்த குரலில் பேசிய ஆஷிக், படத்தின் முக்கிய திருப்பங்களை வெளிப்படுத்தினார். இது, அவரது பின்னால் அமர்ந்திருந்த அபிஷேக் என்ற நபருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அபிஷேக், படம் குறித்து அடுத்ததடுத்தை கூற வேண்டாம் என எச்சரித்தும், ஆஷிக் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசியதால் வாக்குவாதம் முற்றியது.

வாக்குவாதம் விரைவில் கைகலப்பாக மாற, தியேட்டரிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம், படம் பார்த்த மற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

விவகாரம் காவல்துறையினர் கவனத்திற்கு செல்ல, ஆஷிக் மற்றும் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், திரையரங்கங்களில் பொறுமையையும், மற்றவர்களின் புரிதலையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.