உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிகவாங் கிராமத்தில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி ராஜேஸ்வரி, தனது 35 வயது மகன் ராஜாராமுடன் வாழ்ந்து வந்தார்.

ராஜேஸ்வரியின் கணவர் துளசிராம் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், மகன் ராஜாராமுக்கு மதுப்பழக்கம் அதிகமாக இருந்தது.

மது குடிக்க பணம் கேட்டு அவர் தனது தாயிடம் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால், தாய்க்கும், மகனுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

நேற்று, மது வாங்க ரூ.40 கேட்டு ராஜாராம் தனது தாயிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், பணம் கொடுக்க ராஜேஸ்வரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த ராஜாராம், தனது தாயை வீட்டுக்கு வெளியே தரதரவென இழுத்து வந்து, அங்கிருந்த செங்கலால் கொடூரமாகத் தாக்கினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ராஜாராமை கைது செய்து, இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.