உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பவானிபூர் கிராமத்தில், திருடன் என சந்தேகித்து ஒரு இளைஞனை நிர்வாணமாக்கி, கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தாந்த் ராய் என்ற இளைஞர், கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த புதன்கிழமை, பவானிபூரில் உள்ள ஒரு தாபாவில் இரவு உணவுக்குப் பிறகு, தனது நண்பர்களுடன் நெடுஞ்சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
கொண்டாட்டத்தின் போது, மது அருந்திய நிலையில், தோழர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, அவர் கோபத்தில் பவானிபூர் கிராமத்திற்குள் தனியாக நுழைந்துள்ளார். அதிகாலை 2:30 மணியளவில், கிராமத்திலுள்ள ஒரு இடத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ராயை, உள்ளூர்வாசிகள் திருடன் எனத் தவறாக சந்தேகித்துள்ளனர்.
பின்னர், அவரை நிர்வாணமாக்கி, கம்பத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர். அதே நேரத்தில் இந்தக் கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில், அரை நிர்வாணமாக கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில், அவரை கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. அவர் அழும் காட்சியும் அந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கிராம காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், கிராமத் தலைவர் உட்பட அடையாளம் தெரியாத பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
कानपुर के ग्रामीण इलाकों में इन दिनों चोर का बड़ा शोर है, संदिग्ध युवक को चोर समझ कर के ग्रामीणों ने खंभे से बांधकर के जमकर पीटा। शिवराजपुर के भटपुरा गांव की घटना। @CommissionerKnp @Uppolice #Kanpur pic.twitter.com/HONOCTzlh3
— Shyam Tiwari (@Shyamtiwariknp) September 3, 2025
