கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இருந்து, 37 வயதுடைய ஆண் மற்றும் 5 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த சாமல்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டனர். இறந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் நல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது மகன் கவின் என அடையாளம் காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி, கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். கடன் சிக்கல்களில் சிக்கியிருந்த இவர், சில நாட்களுக்கு முன் தனது மனைவியிடம் பணம் வாங்கி வருவதாக கூறி, தனது மகனை அழைத்துக்கொண்டு ரெயிலில் புறப்பட்டுள்ளார். ஆனால், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி, அருகிலுள்ள கிணற்றில் தனது மகனை தள்ளி, பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் கடன் சிக்கல், ஒரு சிறுவனின் உயிரை பறித்தது வருத்தத்திற்குரியது. இந்த குற்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.