காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள குன்றத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்த அபிதா (59) என்ற பெண்ணும், அவரது கணவர் ராஜேந்திரனும், மாமியார் வள்ளியம்மாளும் (88) ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், ராஜேந்திரன் வேலை காரணமாக வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் அபிதாவும், வள்ளியம்மாளும் மட்டுமே இருந்தனர்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து, இருவரையும் கட்டிப்போட்டு, 11 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றார். இது குறித்து குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையின் விசாரணையில், அபிதாவே தனது 35 வயது கள்ளக்காதலனை அழைத்து இந்த கொள்ளையைத் திட்டமிட்டு செய்தது தெரியவந்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குழந்தைகள் இல்லாத அபிதா, அருகிலுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றபோது, திருநெல்வேலியைச் சேர்ந்த 35 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. வயது வித்தியாசம் இருந்தாலும், இருவரும் கள்ளக்காதல் உறவை வளர்த்து, அடிக்கடி தனியாக சந்தித்து வந்தனர். பணத் தேவைக்காக, அபிதா தனது மாமியாரிடம் இருந்த நகைகளை திருடி, அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என கள்ளக்காதலனுடன் திட்டமிட்டார்.

அதன்படி, கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், கள்ளக்காதலனை அழைத்து, வள்ளியம்மாளை கட்டிப்போட்டு நகைகளை பறித்தார். சந்தேகம் வராமல் இருக்க, அபிதாவும் கட்டப்பட்டது போல் நாடகமாடினார். ஆனால், வள்ளியம்மாளுக்கு மட்டும் காயங்கள் இருந்ததும், அபிதாவுக்கு எந்த காயமும் இல்லாததும் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அபிதா சிக்க, கண்காணிப்பு கேமரா காட்சிகளும் அவரது கள்ளக்காதல் விவகாரத்தை உறுதிப்படுத்தியது. தற்போது, அபிதாவின் கள்ளக்காதலன் தலைமறைவாகி, காவல்துறை அவரைத் தேடி வருகிறது.