தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசியல் மற்றும் தொழில் குழுவின் ஜெர்மனி பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொண்ட இந்த பயணத்தின் போது, தமிழ்நாட்டில் ரூ.7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய ஒப்பந்தங்கள்:

நார் பிரெம்ஸ், நார்டெக்ஸ், இ.பி.எம்.-பாப்ஸ்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ரூ.3,201 கோடி முதலீடு – 6,250 வேலைவாய்ப்பு

TNRising முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புதிய ஒப்பந்தங்கள் – 9,000 வேலைவாய்ப்பு

முன்னணி தொழில்துறை நாடான ஜெர்மனியில் நடைபெற்ற TNRising முதலீட்டு மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” என்று கூறினார். “ஐரோப்பாவில் தொழில்துறையின் முதுகெலும்பாக ஜெர்மனி விளங்குகிறது. அதுபோல், இந்தியாவில் தொழில்துறையின் இதயதுடிப்பாக தமிழ்நாடு விளங்குகிறது. உற்பத்தி வளர்ச்சி, பொருளாதார விருத்தி, தொழிற்சாலைகள், பணியாளர்கள் என அனைத்திலும் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது,” என தெரிவித்தார்.

பிரபல நிறுவனங்களுடன் கூட்டணி:

மோட்டார் வாகனத் துறையில் – Daimler, BMW

மின்சாதனத் துறையில் – Schneider

காற்றாலை தொழில்நுட்பத்தில் – ZF, Siemens

தகவல் தொழில்நுட்பத்தில் – Bosch

“Made in Tamil Nadu” என்பது, “Made in Germany” போல தரத்தின் அடையாளமாக மாறி வருகிறது,” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் தொடர்ந்துப் பேசும்போது,

“நாங்கள் முதலீட்டுகளை மட்டும் நோக்காமல், தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜெர்மனியுடன் இணைந்து, ஆசியா-ஐரோப்பா இடையே வலுவான வர்த்தக பாலம் அமைக்க விரும்புகிறோம். தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிலும் நாங்கள் முன்னெடுப்பு கொண்டிருக்கிறோம்,” என தெரிவித்தார்.

“தமிழ்நாட்டிற்கு வரும்போது, உங்கள் பிசினஸ் மட்டுமல்ல, உங்கள் வெற்றியை கொண்டாடும் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், நாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம்,” என உறுதியளித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டு பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளார். மேலும் “தமிழ்நாடு இந்தியாவின் ஜெர்மனி” என்ற வாக்கியத்தில் தொழில்துறையிலும், வளர்ச்சியிலும் மாநிலத்தின் தற்போதைய நிலையை துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளார்.