பீகார் மாநிலம் சசாரம் ரயில் நிலையம் அருகே கடந்த வாரம் நடந்த ஒரு விபத்து, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள ஒரு  கிராமத்தைச் சேர்ந்த ஷாஜாதா (வயது 13), ரீல்ஸ் தயாரிக்க ரயில் நிலையம்  வந்துள்ளார்.

இந்நிலையில்பயணிகள் ரயிலில் ஏறிய சிறுவன்  ரயிலின் கதவுப் பகுதியில் நின்று, புது முயற்சியாக ஸ்டண்ட் செய்வதுபோல் ரீல் எடுக்க முயன்றார். அப்போது திடீரென சமநிலையை இழந்து தண்டவாளத்தில் விழுந்து, ரயிலின் சக்கரத்தில்  சிக்கியதில், அவரது இடது கால் முழுமையாக துண்டிக்கப்பட்டது.

சம்பவத்தை கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்கள், உடனடியாக சிறுவனை  தூக்கி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது துண்டிக்கப்பட்ட காலும் சாக்குப் பையில் போட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவரை மேல்  சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனைக்கு மாற்றினர். சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எடுப்பது  அதிகரித்துள்ள நிலையில், இப்படியான விபத்துகள் நாளுக்கு நாள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பதில் ஈடுபட்டு படுகாயம் அடைந்ததோடு, சிலர் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. புகழுக்காகப் தவறு  செய்யும் இளைஞர்கள், சில நிமிட சந்தோஷத்துக்காக  ஆபத்தில் சிக்குவது தவிர்க்க வேண்டும்   என்பதை உணர வேண்டும் என சமூக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.