நெல்லை மாவட்டத்தில்உள்ள திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 21, 2025) காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில், 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது புத்தகப் பையில் புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து வைத்து வந்தது ஆசிரியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அறிந்த தலைமை ஆசிரியர், உடனடியாக திசையன்விளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவன் எந்த செயலுக்கு முன்னெச்சரிக்கையாக கத்தி கொண்டு வந்ததற்கு காரணம் தெரியவந்தது. அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவன், இதற்கு முன்பு கத்தியைக் காட்டி தன்னை மிரட்டியதாகவும், அதனால் பயந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையாக கத்தியை புத்தகப் பையில் மறைத்து வைத்து வந்ததாகவும் அந்த மாணவன் தெரிவித்தான்.

இந்த தகவல் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காவல்துறையினர் மாணவனை கடுமையாக எச்சரித்து, பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டனர். பள்ளியில் மாணவன் கத்தி கொண்டு வந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.