தூத்துக்குடி மாவட்ட பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த விஜய்(22), அவரது நண்பர்களான முத்துக்குமார் (22), மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் முத்துகவுதம் (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் பாதையில் உள்ள தனியார் உப்பு குடோனில் மது அருந்தியதாகத் தெரிகிறது. இதன்போது, குடிபோதையில் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்துக்குமார், முத்துகவுதம், மரிய பெடலிஸ் சஞ்சய் ஆகிய மூவரும் சேர்ந்து விஜயை உருட்டு கட்டையால் தாக்கியதுடன், அவரது காலில் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், முத்துக்குமார், முத்துகவுதம், மரிய பெடலிஸ் சஞ்சய் ஆகிய மூவரையும் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
