ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (30) திருமண வரன் தேடி வந்தார். சமீபத்தில், திருமண தகவல் மையம் மூலம் கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் தகவல் கிடைத்தது.
அவரது செல்போன் எண்ணைப் பெற்ற கார்த்திக் ராஜ், இளம்பெண்ணுடன் பேசி, அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். மேலும், நேரில் சந்திக்க வருவதாகக் கூறி, தொடுபுழாவில் இளம்பெண் பணிபுரியும் தனியார் அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு இளம்பெண்ணுடனும், அவரது குடும்பத்தினருடனும் பேசிய பின்னர், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், கார்த்திக் ராஜ் இளம்பெண் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை அணிந்து பார்ப்பதாகக் கூறி வாங்கியுள்ளார்.
இதனையடுத்து துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று, இளம்பெண் மூன்றாவது மாடியில் துணிகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கும்போது, அவரை அங்கேயே விட்டுவிட்டு நகையுடன் தப்பியோடினார்.
இதையறிந்த இளம்பெண், தொடுபுழா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருமணம் செய்வதாக ஏமாற்றி 2 பவுன் நகையை திருடிய கார்த்திக் ராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
