தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர். திருமணமானவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் தனது மனைவியுடன் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வெளிப்பகுதியில் உள்ள ஜன்னலின் மேற்பகுதி வழியாக ஒருவர் செல்போன் மூலம் அவர்களை வீடியோ பதிவு செய்தார்.
செல்போனின் வெளிச்சம் கண்ணில் பட்டதால் திடுக்கிட்டு எழுந்த வாலிபர், வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தபோது, ஒருவர் அங்கிருந்து ஓடுவது தெரியவந்தது. இதையடுத்து, அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், படம் பிடித்தவர் பாலக்கோட்டைச் சேர்ந்த 36 வயது கார்த்திக் என்பது தெரியவந்தது.
வாலிபர், கார்த்திக்கை நேரில் சென்று கேள்வி கேட்டபோது, அவரது செல்போனை பரிசோதித்ததில், படுக்கையறையை பதிவு செய்த காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வெளியில் சொல்லக் கூடாது என்று கார்த்திக் எச்சரித்ததோடு, அவ்வாறு செய்தால் அந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர், பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில், கார்த்திக் நிலத்தரகராக பணியாற்றுவது தெரியவந்தது. இந்த சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
