தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான காரசாரமான விவாதம் ஒன்று அரங்கேறியுள்ளது. செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம், “நீங்க எங்களை என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்கன்னு தைரியமா சொல்றீங்களே… இதே பயிற்சியை முதலமைச்சர் விஜய்க்கும் கொடுக்கலாம் இல்லையா?” என்று நேரடியாகவே கேள்வி எழுப்பினார். தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்காமல் தவிர்ப்பதை மறைமுகமாகக் குத்திக்காட்டும் வகையில் கேட்கப்பட்ட இந்த கேள்வி, அங்கிருந்தவர்களிடையே சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது.

​இதைக் கேட்டு சற்றும் பதற்றமடையாத அமைச்சர் ராஜமோகன், செய்தியாளருக்குத் தன் பாணியிலேயே மிகச் சாதுரியமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “முதலமைச்சருக்குப் பயிற்சி கொடுக்கலாம்னு நீங்க சொல்றது போல, பத்திரிகையாளர்களாகிய நீங்களும் ஒரு சார்பாக மட்டுமே பேசாமல் மக்களுக்காகப் பேச வேண்டும் என்று உங்களுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நானும் சொல்லலாம் அல்லவா?” என்று நெத்தியடியாகப் பதிலளித்தார். அமைச்சரின் இந்த அதிரடி பதில், செய்தியாளரின் வாயை அடைக்கும் விதமாக அமைந்ததோடு, தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்களால் பயங்கரமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.