வடகிழக்கு இந்தியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் அரிய இனமான மேகச் சிறுத்தை (Clouded Leopard) தனது குட்டிகளுடன் உலா வரும் காட்சி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகளவில் 10,000-க்கும் குறைவாகவே உயிருடன் இருக்கும் இந்த அரிய சிறுத்தையின் காட்சி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண சிறுத்தையை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படும் இந்த விலங்கு, உடலில் மேகம் போன்ற புள்ளிகளும், மரங்களில் எளிதில் ஏறும் திறனும் கொண்டதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வீடியோவை ஓய்வுபெற்ற IFS அதிகாரி சுசாந்த நந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தாய் சிறுத்தை தனது குட்டிகளுடன் மழைக்காடுகளில் நடமாடும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியதுடன், இரவில் வேட்டையாடும் தன்மை கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மழைக்காடுகளில் அரிய காட்சியை காணும் வாய்ப்பு இது” என அவர் எழுதியிருந்தார்.

“>

 

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, மக்கள் ஆச்சரியத்துடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “என் வாழ்நாளில் இதுபோன்ற சிறுத்தையை பார்த்ததே இல்லை” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். “இது உண்மையிலேயே ஒரு அரிய காட்சி, என் நாளையே மகிழ்வித்துவிட்டது” என மற்றொருவர் பதிவிட்டார்.

பலரும், “தாய் மட்டுமல்ல, குட்டிகளும் மிக அழகாக உள்ளன” என பாராட்டியுள்ளனர். இயற்கையின் அபூர்வ பரிசாகக் கருதப்படும் இந்த மேகச் சிறுத்தையின் குடும்பக் காட்சி, தற்போது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பெரும் ஈர்ப்பாக உள்ளது.