கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகா வடமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாளை கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான 29 வயது பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த இளம் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில் அடிக்கடி நேரிலும் சந்தித்துள்ளனர். இந்த பழக்கவழக்கம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. அதனால் தனது மனைவியை அவர் கண்டித்துள்ளார்.
அதன் பின் அந்த பெண் கலையரசனுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். அதனால் கோபமடைந்த கலையரசன் தன்னுடன் பேசவில்லை எனில் நாம் இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என தொடர்ந்து மிரட்டி உள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பெண் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து கலையரசனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
