திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கொலைகள் குறிப்பாக முன்விரோதம், சொத்து, குடும்ப குழப்பம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது.
இதனால் நெல்லையில் மக்கள் மத்தியில் பெரும் பயமும், பதற்றமும் உருவாகியுள்ளது. இந்நிலையில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பாக தன்னை காரை வைத்து மோதி கொலை செய்யும் முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளதாகவும் இருப்பினும் காவல் துறையினரின் அலட்சியத்தால் பிரபுதாஸ் உயிர் போனது என்று அவருடைய குடும்பத்தினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்ததாகவும், இந்த ஆண்டு 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் வள்ளியூர் உட்கோட்டத்தில் 6க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளன.
மேலும் சமீபத்தில் நடந்த ஆணவக் கொலை தமிழக முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இரு தரப்பினர் இடையே தொடர்ந்து ஏற்படும் மோதல்களால் அதிகமான கொலைகள் நடந்துள்ளன.
இருப்பினும் நடக்க இருந்த பல கொலைகள் தடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு திருநெல்வேலி மாநகர மாவட்ட பகுதிகளில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
