நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்து, அவரது உடலை காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. கொலையில் தொடர்புடையதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். ஆனால், விசாரணையில் முருகப்பெருமாளுக்கு கொலைக்கான தொடர்பு இல்லை என்றும், உண்மையில் இந்தக் கொலையை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நியூட்டன், பெனிட்டோ ஆகியோர் செய்தது என்றும் தெரியவந்தது.
சூலூர் காவல் ஆய்வாளர் லெனின், செட்டிபாளையம் காவல் நிலையத்தின் பொறுப்பையும் கவனித்து வந்தார். முருகப்பெருமாளுக்கு சம்பவத்துடன் தொடர்பு இல்லாதபோதும், அவரை சரியான விசாரணை இன்றி கொலை வழக்கில் குற்றம்சாட்டி கைது செய்த விவகாரம், உயர் காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, டி.ஐ.ஜி சசி மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இணைந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காவல் ஆய்வாளர் லெனின் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல், முருகப்பெருமாளை வழக்கில் தவறாகச் சேர்த்தது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், டி.ஐ.ஜி சசி மோகன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் லெனின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கொலை வழக்கு சரியாக விசாரிக்காததால் காவல் அதிகாரி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
