கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சொர்பத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரோகமாலா. இவர்களது மகன் நூர்சல் ஹக்(8) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை நூர்சல் ஹக் வீட்டிற்கு அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டிற்கு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அந்த சிறுவன் திரும்பி வந்த போது திடீரென வந்த கரடி சிறுவனை தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்து சென்று கடித்து குதறி கொன்றது. நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.

அப்போது தேயிலை தோட்டத்திற்கு அருகே ரத்தமும் பாலும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தோட்டத்திற்குள் சென்று பார்த்தனர். அங்கு நூர்சல் ஹக் சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.