சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், திருப்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடக் காண்டிராக்டர் யுவராஜ் மனைவி மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
46 வயதான உமாமகேஸ்வரிக்கு நீண்டகாலமாக உடல் நலப் பிரச்சனை இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவருடன் சேலத்திற்கு வந்து, தனியார் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மதியம், விடுதி அறையில் இருந்தபோது உமாமகேஸ்வரி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக யுவராஜ் 108 ஆம்புலன்சை அழைத்தார். ஆனால் மருத்துவ பணியாளர்கள் வந்து பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, உடலை ஊருக்கு கொண்டு செல்ல பணம் இல்லாததால் வெளியில் சென்று தெரிந்த ஒருவரை சந்தித்து பணம் வாங்கி வருவதாக ஹோட்டலில், யுவராஜ் கூறி வெளியேறினார்.
மதியம் 1 மணிக்கு சென்ற யுவராஜ், பிற்பகல் 3 மணி ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகம், சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உமாமகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேசமயம், யுவராஜின் செல்போன் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. விடுதியில் கொடுத்திருந்த முகவரியை வைத்து விசாரித்தபோது, அந்த முகவரியில் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை காலி செய்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதனால், உமாமகேஸ்வரியின் மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது. அவர் இயல்பாக இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது தெளிவாகவில்லை. யுவராஜின் இருப்பிடத்தை கண்டறிந்து விசாரித்தாலே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி இறந்த நிலையில் வெளியே சென்ற கணவர் காணாமல் போன இந்த சம்பவம், சேலத்திலும் திருப்பூரிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
