கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (40) மற்றும் தெக்கும்பகம் பகுதியை சேர்ந்த அதுல்யா (29) ஆகியோருக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
ஆனால், கடந்த மாதம் 19ஆம் தேதி அதுல்யா, தங்கி இருந்த குடியிருப்பின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதுல்யாவின் தந்தை தெக்கும்பகம் போலீசில் புகார் அளித்தார்.
அதில், மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் சதீஷ் தொடர்ந்து வரதட்சணை தொல்லை அளித்ததுடன், அடிக்கடி கடுமையாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். புகாரின் பேரில், வெளிநாட்டில் இருந்த சதீஷுக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்நிலையில், இன்று காலை சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த சதீஷை, விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். அதுல்யா மரணம் தொடர்பாக சதீஷிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
