சென்னை சூளைமேடு, பெரியார் பாதையைச் சேர்ந்த பிரமிளா (47) தனது மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கணவர் ராமச்சந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்த பிரமிளா, கடந்த சில நாட்களாக இளைய மகன் முகில் (19) மது பழக்கத்தால் தினமும் வீட்டில் தகராறு செய்வதை சகித்துக்கொண்டு வந்தார். இதே நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இரவு போதையில் வந்த முகில், தாயை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நேற்று காலை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்ற பிரமிளா, “இளைய மகன் முகில் போதையில் தகராறு செய்து என்னைக் கொன்று விடுவேன் என மிரட்டினார். கோபத்தில் நான் அவரை வெட்டிக்கொன்றுவிட்டேன்” என்று சரணடைந்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆனால், முகிலின் கழுத்தில் ஆழமான ஆறு வெட்டுக்காயங்கள் இருப்பதை கண்ட போலீசாருக்கு, பிரமிளாவால் தனியாக இப்படிச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பிரமிளாவின் மூத்த மகன் வசந்தகுமார் (30) மற்றும் அவரது நண்பர் கண்ணன் ஆகியோர் சம்பவ இரவில் வீட்டிலிருந்து வெளியேறிய காட்சிகளை கண்டறிந்தனர். ‘கிடுக்கிப்பிடி’ விசாரணையில், உண்மையில் முகிலை வெட்டிக் கொன்றது வசந்தகுமார்தான் என்றும், அதை மறைக்க தாய் பிரமிளா தான் கொன்றதாக போலீசில் சரணடைந்து நாடகம் ஆடியது என்றும் வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையில், மதுவில் அடிமையான முகில், தாயை அடிக்கடி தாக்கி, கொலை மிரட்டல் விடுப்பது, வீட்டு செலவுக்கு உதவாதது போன்ற காரணங்களால் வசந்தகுமார் ஆத்திரமடைந்தது தெரியவந்தது. மேலும், முகிலின் செயலால் வசந்தகுமாரின் திருமணம் தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சம்பவ இரவில், வசந்தகுமார் தனது நண்பர் கண்ணனுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முகிலை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். சம்பவத்தை மறைக்க தாய் பிரமிளா போலீசில் சரணடைந்து குற்றத்தை ஏற்றுக் கொண்டார். தற்போது, வசந்தகுமார், கண்ணன், பிரமிளா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.