திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் மேத்யூ (29), மனைவி ஜான்சி, 4 வயது மகள் சாரிகா ஆகியோருடன் வசித்து வந்தார். காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை கொண்டு செல்லும் பணியில் இருந்த அவர், கடந்த ஜூன் 19-ம் தேதி வேலையை முடித்து வீடு திரும்பும் போது, புட்லூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில், எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாக, ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஆனால், மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக அரவிந்த் மேத்யூவின் பெற்றோர் புகார் அளித்ததால், போலீசார் விசாரணை தொடங்கினர். பிரேத பரிசோதனையில், அரவிந்த் மேத்யூ வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதனால், ரெயில் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என போலீசார் கண்டறிந்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், அரவிந்த் மேத்யூவுக்கு அதே புட்லூர் பகுதியை சேர்ந்த உஷா (29) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. ஆனால், உஷாவுக்கும் மேலும் ஒருவருடன் தொடர்பு இருந்தது. இதை அறிந்த அரவிந்த், உஷாவை கண்டித்ததால், ஆத்திரமடைந்த உஷா, கூலிப்படையை ஏவி அரவிந்தை வெட்டிக் கொலை செய்ய ஏற்பாடு செய்தார். பின்னர், ரெயில் மோதி இறந்தது போல காட்ட, உடலை தண்டவாளத்தில் போட்டனர்.

இந்த கொடூரச் சம்பவத்தில், கள்ளக்காதலி உஷா மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் தலைமறைவாக உள்ள பால்ராஜை திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம், புட்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.