அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மதியழகனின் மகள் அனுசியா (23), சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட மாங்குடியைச் சேர்ந்த குமரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்த காதல் ஜோடி, குமரேசனின் சொந்த ஊருக்குச் சென்றபோது, அவரது பெற்றோர் எதிர்த்து இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இருவரையும், குமரேசனின் பெற்றோர் தகவல் தெரிவிக்க, அனுசியாவின் உறவினர்கள் அரியலூருக்கு அழைத்து வந்து, அவரது செல்போனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அனுசியாவை சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது அக்கா ஐஸ்வர்யாவின் வீட்டில் 10 நாட்களாக தங்க வைத்தனர். அங்கிருந்தபடியே அனுசியா காதலன் குமரேசனுக்கு ரகசியமாக தகவல் அளித்தார். இதையடுத்து குமரேசன், நண்பர்களுடன் வாடகை கார் மூலம் கிராமத்துக்கு வந்து, தெருமுனையில் காரை நிறுத்தி, தனது 3 நண்பர்களை வீட்டிற்குள் அனுப்பினார்.

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல கையில் மஞ்சள் பை பிடித்து வந்த நண்பர்களைக் கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடிய அனுசியா எழுந்து ஓடி, குமரேசன் காத்திருந்த காரில் ஏறினார். சில நொடிகளில் நண்பர்களும் காரில் ஏறி வேகமாக தப்பிச்சென்றனர்.

இந்த களேபரத்தில், தடுக்க முயன்ற அனுசியாவின் அக்கா மகள் மித்ரா மீது இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வடிந்த நிலையில் மித்ரா கதறி அழ, கார் மின்னல் வேகத்தில் கிராமத்திலிருந்து புறப்பட்ட காட்சிகள் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்த வீடியோவாக வைரலானது.

கத்தி காட்டி மிரட்டியதால், தடுக்க முயன்றவர்கள் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மித்ரா உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில், அனுசியா – குமரேசன் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், இருவரும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை காயமடைந்த பரபரப்பும், காதல் ஜோடி தப்பிச் சென்ற சம்பவமும், அப்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.