உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில், இன்ஸ்டாகிராமில் தற்கொலை வீடியோ பதிவிட்ட 11-ம் வகுப்பு மாணவியை போலீசார் விரைவான நடவடிக்கையால் உயிருடன் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷம்சாபாத்தில் வசிக்கும் 15 வயது மாணவி, கையில் பல மாத்திரைகள் வைத்துக் கொண்டு, பின்னணியில் சோக இசையுடன் ஒரு ரீல் உருவாக்கி, “இவ்வளவு மாத்திரைகள் போதும்… குட்பை… என்னை சந்திக்க வாருங்கள்” என எழுதி பதிவிட்டார். இதனால் அவர் ஏதோ தவறான முடிவு எடுக்கப் போகிறார் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆக்ரா சைபர் குழுவினர் அந்த ரீலை கவனித்து, உடனடியாக மெட்டா (ஃபேஸ்புக்) நிறுவனத்திலிருந்து மாணவியின் கணக்கு விவரங்களை பெற்று, உள்ளூர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். எச்சரிக்கை பெற்ற ஷம்சாபாத் காவல்துறை, சில நிமிடங்களில் மாணவியின் வீட்டை அடைந்தது.

அப்போது, மாணவி தனது வீட்டில் பாதுகாப்பாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், காய்ச்சல் மாத்திரைகளை வைத்து வெறும் வீடியோவாக மட்டுமே பதிவு செய்ததாகவும், அது தவறுதலாக தற்கொலை முயற்சி போல் தோன்றியதாகவும் அவர் கூறினார்.

போலீசார், மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்கி, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை செய்யக் கூடாது என்று எச்சரித்தனர். “சமூக ஊடகங்களில் தற்கொலை சுட்டுரையுடன் வீடியோக்களை பதிவிடுவோர் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி உயிர்களை காப்பாற்றும் பணியில் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்” என சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.