பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், மனைவியின் துன்புறுத்தலால் மனமுடைந்த முன்னாள் சிஆர்பிஎஃப் ஜவான் ஆனந்த் குமார் (45) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரண் மாவட்டம் ரெவில்கஞ்ச் தானா பகுதியின் ஜக்குவா கிராமத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் சிங்கின் மகனான ஆனந்த், இறப்பதற்கு முன் தனது தற்கொலைக்கான காரணங்களை விளக்கும் வீடியோவும், விரிவான தற்கொலைக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது மனைவி தலைமறைவாகியுள்ளார்.
ஆனந்த், கடந்த 2006ஆம் ஆண்டு விடுப்பு வழங்கப்படாததால் மூன்று சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் செய்திகளில் இடம்பிடித்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் சிஆர்பிஎஃப் பணியில் இருந்து நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் 3 மாத பரோலில் விடுவிக்கப்பட்ட அவர், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன்பே இந்த கடும் முடிவை எடுத்தார்.
இறந்தவரின் அருகில் மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், “என் மனைவி சரிதாவும், மாமியாரும் இணைந்து என் வாழ்க்கையையும் குடும்பத்தையும் அழித்துவிட்டனர். என் மரணத்திற்கு என் மனைவியே காரணம். அவள் மன்னிக்கப்படக்கூடாது.
என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என் இறுதிச்சடங்குகளில் பங்கேற்கக் கூடாது. என் மருமகன்களில் ஒருவர் இறுதிச்சடங்குகளைச் செய்ய வேண்டும். என் சகோதரிகள் தாயை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று எழுதியிருந்தார்.
