கேரளாவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஒரு அப்பாவி பூனையை கொடூரமாகக் கொன்று, அதற்கான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாலக்காடு மாவட்டம் செர்புலசேரியைச் சேர்ந்த ஷஜீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவின் விசாரணையில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. பூனைக்கு உணவு கொடுத்து நன்கு நட்பு பாராட்டிய பின்னர், அந்த பாவம் தெரியாத விலங்கினை கொடூரமாக கொன்றதோடு, இறந்த பூனையின் உடல்பாகங்களையும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இது கேரளாவில் அல்லாமல் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடந்ததாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதிக லைக், ஃபாலோயர் பெறும் ஆசையினால்தான் இந்த கொடூரச் செயலை செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஷஜீர் காவலில் இருக்கிறார். அவரது மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் BNS பிரிவு 325 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் தற்போது போலீசாரால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பிரபலமாவது என்ற பெயரில் மனிதத்தன்மையே இல்லாத செயல் சமூகத்தையே உலுக்கியுள்ளது.
