மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டம், ஏற்கனவே இரும்புத் தாது, பாக்சைட், மாங்கனீசு போன்ற கனிம வளங்களுக்குப் பிரசித்திபெற்றது. இப்போது சிஹோரா தாலுகாவின் மஹ்கவான் கியோலாரி கிராமத்தை ஒட்டிய பேலா பஞ்சாயத்தில் புதிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது அரசு அதிகாரிகள் மற்றும் புவியியல் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) மற்றும் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 100 ஹெக்டேர் நிலத்தில் தங்கத் துகள்கள் உள்ளன என கண்டறியப்பட்டது. இது கிராம மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தங்க இருப்பிடம், மண் மற்றும் புவியியல் அமைப்புகள் சுரங்கத்திற்கேற்ற வகையில் இருப்பதால், இங்கு பெரிய அளவில் தங்க அகழ்வாராய்ச்சி நிகழும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் சுபாஷ் படேல் கூறுகையில், “தங்கம் கிடைப்பது எங்கள் கிராமத்திற்கு புதிய வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் தரும்,” என்றார். தற்போது கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், இந்த சுரங்க வாய்ப்பு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்நிலையிலே, இந்த தங்கம் கண்டுபிடிப்பு ஜபல்பூர் மாவட்டத்தையும் மத்தியப் பிரதேசத்தையும் பொருளாதார ரீதியாக மேலே தூக்கும் ஒரு முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. விவசாயம் மற்றும் சாதாரண தொழில்களில் இருந்த மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என நம்பப்படுகிறது.
அரசாங்கம் இங்கு சுரங்கத் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கிராம மக்கள் “எங்கள் நிலத்தின் தலைவிதி மாறப்போகிறது” என்று பெருமிதமாக கூறுகின்றனர்.
