கரூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாநாட்டுப் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட 31 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களின் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், ஈரோட்டைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கு அரசுப் பணிக்கான கல்வித்தகுதி இல்லாத காரணத்தால், அவருக்கு வேலைக்கு மாற்றாக ரூ.10 லட்சம் கருணைத் தொகையை முதலமைச்சர் விஜய் வழங்கி ஆறுதல் கூறினார்.
