கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, திமுக தரப்பிலிருந்து அடுத்தடுத்து கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கனிமொழி எம்.பி-யைத் தொடர்ந்து, தற்போது திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரத்தில் விஜய்யை மிக நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் பேசுகையில், “கரூரில் அன்று விஜய் தாமதமாகச் சென்றதுதான் அந்த உயிரிழப்புகளுக்கே மிக முக்கியக் காரணம். அங்கு வெயில் மற்றும் தாகத்தால் 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்; அதில் உடனே களமிறங்கிப் பலரை மருத்துவமனையில் சேர்த்து, 60-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியது திமுக அரசுதான்!” என்று போட்டுடைத்துள்ளார். கரூரில் தவெக மாநாட்டுப் பிரசாரத்தின் போது நடந்த சம்பவத்தை மையமாக வைத்து திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
