மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து, கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு டெல்லி வரை எதிரொலித்துள்ளது.
அவர் பேசுகையில், “மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்யப் போவதாகப் பேச்சு அடிபடுகிறது; அதுபோன்ற எவ்வித தொகுதி மறுவரையறையையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி சாதனை படைத்த தமிழ்நாட்டை இதில் தண்டிக்கக் கூடாது; நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதை நாம் யாருக்கும் பறிக்கவிடவும் மாட்டோம்!” என்று தமிழகத்தின் மாநில உரிமைகளுக்காக மிக ஆவேசமாக முழங்கினார்.
