உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தனது தோளில் ஒரு முழு மோட்டார் சைக்கிளையும் சுமந்து கொண்டு நடந்து சென்ற விசித்திரமான மற்றும் ஆபத்தான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து, அதன் மூலம் பிரபலமடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அந்த இளைஞர் இந்த ஆபத்தான சாகசத்தை மேற்கொண்டுள்ளார். சினிமா கதாபாத்திரமான ‘பாகுபலி’ போல பைக்கைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதைக் கண்டு, அங்கு கூடின மக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

“>

மேலும் பலர் இதைத் தடுக்காமல் வீடியோ எடுக்கத் தொடங்கியதால், அந்தப் பரபரப்பான சந்தைப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாகச் சட்டவிரோதமான இந்தச் செயல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அதோடு பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த இளைஞரை அடையாளம் கண்டு கைது செய்யப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக ஊடகப் புகழுக்காகவும் லைக்குகளுக்காகவும் இளைஞர்கள் தங்களது உயிரையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் ஆபத்தில் தள்ளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.