ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தின் பெந்துர்த்தி பகுதியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் தொல்லை விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள சந்தைக்கு மதியம் 2 மணியளவில் காய்கறி வாங்கச் சென்ற இளம் பெண் ஒருவர், வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் தனியாக ஏறியுள்ளார். ஆட்டோ பாதி தூரம் சென்று கொண்டிருந்தபோது, அந்த ஓட்டுநர் திடீரென அந்தப் பெண்ணிடம் தனக்கு உடலுறவு கொள்ள சம்மதித்தால் ரூ.500 பணம் தருவதாகவும், தனது அறைக்கு வருமாறும் அநாகரிகமாகப் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆட்டோவை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான இடத்தில் நிறுத்தியும் அவர் வற்புறுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rio321 (@iamrioaddams_)

இதனால் சற்றும் பதற்றமடையாத அந்தப் பெண், தனது சாதுரிய புத்தியால் மொபைல் கேமராவை ஆன் செய்து ஓட்டுநரின் முகம் மற்றும் அவரது பேச்சைத் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், தந்திரமாகப் பேசி தனது வீட்டின் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, உள்ளே சென்று பொருட்களை எடுத்து வருவதாகக் கூறியதும் பயந்துபோன அந்த ஓட்டுநர் அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பியோடியுள்ளார்.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அந்தப் பெண், “நான் எந்தவொரு அசிங்கமான அல்லது அரைகுறை ஆடையும் அணியவில்லை, சாதாரண டீ-சர்ட் மற்றும் பேண்ட் தான் அணிந்திருந்தேன்; இருந்தாலும் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது” எனக் கூறி, குற்றவாளியைக் அடையாளம் காண உதவுமாறு கோரியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் தைரியத்தைப் பாராட்டி வரும் நிலையில், விசாகப்பட்டினம் மாநகர போலீசார் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.