மேற்கு ஆசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை உலகளாவிய முதலீட்டாளர்களைக் கவர்ந்து மீண்டும் அசுர வேகத்தில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச சொத்து கண்காட்சியில் கலந்து கொண்ட துபாயின் பிரபல டானியூப் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ரிஸ்வான் சஜன், இந்திய நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் தங்களது முதலீட்டுத் தளத்தை இந்தியப் பெருநகரங்களிலிருந்து துபாய்க்கு ஏன் மாற்றி வருகிறார்கள் என்பதற்கான முக்கியக் காரணங்களை விளக்கியுள்ளார்.
இந்தியாவின் மும்பை அல்லது குருகிராம் போன்ற நகரங்களின் பிரீமியம் பகுதிகளில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்குத் தற்சமயம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, மும்பையின் பந்த்ரா அல்லது நரிமன் பாயிண்ட் பகுதிகளில் ஒரு சதுர அடி கார்பெட் விலை சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரை எகிறியுள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாறாகத் துபாயின் முதன்மையான இடங்களில் ஒரு சதுர அடி 70,000 முதல் 90,000 ரூபாய் வரையிலான மிகக் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்த வீடுகள் அனைத்தும் அதிநவீன வசதிகளுடன் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ஃபர்னிச்சர் வீடுகளாக வழங்கப்படுவதால், லண்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் துபாய் இந்தியர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் லாபகரமான தேர்வாக மாறியுள்ளது.
இதனுடன் வருமான வரி இல்லாத சூழல் மற்றும் நீண்ட காலக் கோல்டன் விசா போன்ற சலுகைகளும் துபாயை இந்தியப் பணக்காரர்களின் புதிய சொர்க்கபுரியாக மாற்றியுள்ளன.
