இளம் வீரர் திலக் வர்மாவின் தற்போதைய சுமாரான ஃபார்ம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அயர்லாந்து தொடர் முதல் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகள் வரை, அவரது பேட்டிலிருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலான ஒரு இன்னிங்ஸ்கூட வெளிவரவில்லை. இத்தகைய மோசமான ஆட்ட வெளிப்பாட்டிற்கு மத்தியிலும், அவர் தொடர்ந்து அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்று வருவது பலரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், திலக் வர்மாவை அணியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து 1983 உலகக்கோப்பை வென்ற அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரீகாந்த் கூறுகையில், “திலக் வர்மாவை அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் நியமித்துவிட்டு, வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து அவரை ஏன் மறைத்துப் பாதுகாக்கிறீர்கள்? அக்ஷர் படேலுக்கு முன்னதாக திலக் வர்மாவை பேட்டிங் செய்ய அனுப்புகிறார்கள். ஷார்ட்-பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் திலக் வர்மா திணறுவார் என்பது அணி நிர்வாகத்திற்குத் தெரியும் என்பதால் தான் அவரைப் பாதுகாக்க முயல்கிறார்கள்.
அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன், ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை என்று சாடியுள்ளார். மேலும், அயர்லாந்துக்கு எதிரான போட்டிகள் முதல் இதுவரை திலக் வர்மா முறையே 19, 55, 13, 24, 3 மற்றும் 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்தச் சூழலில், திலக் வர்மாவை நீக்கிவிட்டு, 3 இன்னிங்ஸ்களில் 5 ரன்கள் எடுத்தார் என்பதற்காக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்சனை கீழ்வரிசை ஆட்டக்காரராகப் பயன்படுத்தலாம் என்றும் ஸ்ரீகாந்த் தனது ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
