அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் போல நாடகமாடிய இந்திய மென்பொருள் பொறியாளர் அவிநாஷ் நார்னே (30) என்பவரை அமெரிக்கக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அவிநாஷுக்கும், ராஜிலா சப்பிலி (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 2025-ல் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தனது மனைவி குளியலறை கதவைத் திறக்கவில்லை என்றும், தான் 40 நிமிடங்கள் வெளியே சென்றுவிட்டு வந்து பார்த்தபோது அவர் சடலமாகக் கிடந்ததாகவும் அவிநாஷ் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், உடற்கூராய்வு முடிவில் ராஜிலா சப்பிலி மூச்சுத்திணறடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானதால், இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது.
காவல்துறையினர் நடத்திய அதிநவீன டிஜிட்டல் விசாரணையில், அவிநாஷின் பொய் அனைத்தும் தவிடுபொடியாயின. வீட்டின் ‘மின்னணு பூட்டு’ பாதுகாப்புத் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவிநாஷ் குறிப்பிட்ட அந்த 40 நிமிட இடைவெளியில் வீட்டிற்குள் வேறு யாரோ அந்நிய நபர்கள் வந்ததற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்பது உறுதியானது. மேலும், அவிநாஷின் கைபேசியை ஆய்வு செய்ததில், அவருக்கு இந்தியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்ததும், அந்தப் பெண் இவர்களது திருமணத்திற்கே வந்திருந்ததும் அம்பலமானது.
மனைவியைக் கொலை செய்த அன்றைய தினமே கள்ளக்காதலியுடன் பேசியதோடு, சடலத்தின் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவிநாஷ் தனக்குத் தரும் பழச்சாறு பானத்தில் இருமல் மருந்தின் சுவை இருப்பதாக தனது குறுஞ்செய்தி வாயிலாகத் தோழியிடம் புலம்பியிருந்த ஆதாரங்களும் காவல்துறையினரிடம் சிக்கின. தற்போது முதல்நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவிநாஷுக்கு, 50 லட்சம் டாலர் பிணைத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
