தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் நடந்த கொடூர சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமாதேவி என்ற பெண் தனது கணவர் சம்பத்துடன் சேர்ந்து  உணவகத்தை நடத்தி வந்தார்.

இந்தநிலையில், அந்த உணவகத்தில் வருகிற ஒரு வாடிக்கையாளர் ராஜய்யாவுடன் ரமாதேவிக்கு நெருக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாற, அவர்களது உறவை சந்தேகித்த சம்பத்தை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

அதனால் தடயமின்றி கொலை செய்வதற்கான வழியை யூடியூப்பில் தேடிய ரமாதேவி, பூச்சிக்கொல்லி மருந்தை காதில் ஊசி மூலம் செலுத்தினால் மரணம் ஏற்படும் எனக் கூறும் ஒரு வீடியோவை பார்த்துள்ளார்.

போலீசாரால் கண்டுபிடிக்க முடியாதது என நம்பி, இதையே தனது காதலன் ராஜய்யாவிடம் செயல்படுத்தச் சொன்னார். ராஜய்யா, சம்பத்தை விருந்துக்கு அழைத்து, அதிகமாக மது கொடுத்து மயக்கி, பின்னர் காதில் பூச்சிக்கொல்லி ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு ரமாதேவி போலீசில் தனது கணவர் காணவில்லை என போலி புகார் அளித்துள்ளார். ஆனால், சம்பத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவரின் மரணம் குறித்து சந்தேகங்கள் எழ, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் உண்மை தெரியவந்தது.  இதனையடுத்து ரமாதேவியும், ராஜய்யாவும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கு, யூடியூப்பில் கிடைக்கும் தகவல்களைத் தவறாக பயன்படுத்தி எவ்வாறு நவீன முறையில் கொலை செய்யப்படுகிறது என்பதற்கு மிக பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.