ஹைதராபாத் சனத்நகர் செக் காலனியைச் சேர்ந்த ரஜிதா (வயது 33) ஒரு சிறந்த மனநல மருத்துவராக பணியாற்றி வந்தவர். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மனநல மருத்துவமனையில் பயிற்சி பெற்றபோது, ரோஹித் என்ற இளைஞர் நோயாளியாக வந்திருந்தார்.

அவரது மனநலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனை அளித்த ரஜிதாவின் உதவியால், ரோஹித்தின் மனநிலை சிறந்தது என அவரது பெற்றோர்  ஒப்புக்கொண்டனர். இதற்குப் பின் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி, இரு குடும்பங்களின் ஒப்புதலோடு திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு ரோஹித் வேலைக்குச் செல்லாமல், தனது மனைவி சம்பாதிக்கும் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட செலவுகளை நடத்தினார். ரஜிதா ஒரு புகழ்பெற்ற சர்வதேச பள்ளியில் குழந்தை உளவியலாளராக பணிபுரிந்து வந்தார். தனது கணவரை வாழ்க்கையை பொறுப்புடன் நடத்துமாறு பலமுறை கேட்டபோதும், ரோஹித் அதை ஏற்கவில்லை.

அதைவிட, ரோஹித்தின் பெற்றோரும், அவரது சகோதரரும் சேர்ந்து ரஜிதாவை வார்த்தையால் வன்முறையாகவும், உடல் ரீதியான துன்புறுத்தல்களும் செய்ததாக அவரது குடும்பத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான துன்புறுத்தலால் மனஅழுத்தத்தில் இருந்த ரஜிதா, ஜூலை 16ஆம் தேதி தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டவர், பின்னர் தாயுடன் செக் காலனியில் இருந்தார்.

ஆனால் கடந்த  ஜூலை 28 ஆம் தேதி தனது வீட்டின் நான்காவது மாடியில் உள்ள குளியலறை ஜன்னலிலிருந்து கீழே குதித்து மீண்டும் தற்கொலைக்கு முயன்றார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவாக அறிவிக்கப்பட்ட பிறகு, செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, ரஜிதாவின் தந்தை நரசிம்ம கவுட் அளித்த புகாரின் அடிப்படையில் ரோஹித் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஒரு மனநல மருத்துவராக இருந்தும், குடும்பத்தினரிடமிருந்து தொடர்ச்சியாக ஏற்பட்ட துன்புறுத்தல்களால் ஒருவரின் உயிர் பறிபோனது சமூகத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியயையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் குடும்ப அதிர்ச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வலியுறுத்துகிறது.