” முட்டாள்தனம் உச்சத்தில் இருக்கு, ரயில் என்ன உங்களோட சொந்த சொத்தா, பொதுநல உணர்வே இல்லாம இப்படி பண்ணியிருக்கீங்களே!” என்று நந்திகிராம் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ஏசி பெட்டியைத் தங்களது தேன்நிலவுக்காக ரோஜா இதழ்கள், பலூன்கள் மற்றும் “ஐ லவ் யூ” என்ற வாசகங்களால் அனுமதியின்றி அலங்கரித்த புதுமணத் தம்பதியரின் வைரல் வீடியோவைப் பார்த்துவிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளும் சமூக ஊடகங்களில் கடுமையான கோபத்துடன் கொந்தளித்து வருகின்றனர்.

ஜூன் 7, 2026 அன்று அவுரங்காபாத்தில் இருந்து ஜால்னா ரயில் நிலையத்திற்கு காரில் வந்த அந்தத் தம்பதியினர், நந்திகிராம் எக்ஸ்பிரஸில் (ரயில் எண்: 11002) ஏறுவதற்கு முன்பாகவே ‘ரஹத் ரூம் டெக்கரேஷன்’ என்ற ஆன்லைன் நிறுவன அலங்கரிப்பாளரை வைத்து ரகசியமாகப் பெட்டியை சொகுசு ஓட்டல் அறை போல மாற்றியுள்ளனர்.

இந்தத் ‘தேன்நிலவுப் பெட்டி’ வீடியோ ஜூலை 6-ஆம் தேதி இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, முதல் வகுப்பு ஏசி பெட்டியிலேயே வெளியாட்கள் எப்படி அனுமதியின்றி நுழையலாம் என்ற கடுமையான பாதுகாப்புக் குறைபாடு கேள்விகள் எழுந்ததால், தெற்கு மத்திய ரயில்வே உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

“>

 

இதன் விளைவாக, பணியில் இருந்த தலைமை டிக்கெட் ஆய்வாளர் கிரிஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், ரயிலுக்குள் அத்துமீறி நுழைந்து அலங்காரம் செய்த நபர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.