சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 விசாரணை கைதிகள், எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் கொண்டு செல்லப்பட்டனர். பஸ்சை நவீன்குமார் என்ற போலீஸ்காரர் ஓட்ட, பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், பாபு, சங்கர் தலைமையில் 30 போலீசார் கூடவே சென்றனர்.
விசாரணை முடிந்த பிறகு இரவு 8 மணியளவில் பஸ் மீண்டும் புழல் சிறைக்கு புறப்பட்ட போது, கைதிகள் ஆட்டம்பாட்டமாக இருந்தனர். வியாசர்பாடி பகுதியில் பஸ் வந்தபோது கைதிகள் திடீரென பஸ்சில் ரகளையில் ஈடுபட்டு, பக்கவாட்டில் அடிக்கத் தொடங்கினர். போலீஸ்காரர் பஸ்ஸை சாலையோரமாக நிறுத்தினார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பஸ்ஸுக்குள் கஞ்சா பொட்டலங்களை வீசினர். இதை போலீசார் தடுக்க முயன்றபோது, கைதிகள் திட்டமிட்டு பெரிய கலவரம் செய்தனர். போலீசாரை ஆபாசமாக திட்டி, தாக்கும் அளவிற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பஸ்சின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. விளக்குகள் நொறுக்கப்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையால் பொதுமக்களும் திரண்டு பார்த்தனர். பின்னர் போலீசார் கைதிகளை சமாதானப்படுத்தி, மீண்டும் பஸ்சில் ஏற்றி புழல் சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலதிகாரிகளுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. உரிய புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவிய நிலையில், அதில் கைதிகள் போலீசாரை திட்டுவதும், தாக்குவதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதைக் கண்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவலுக்கு சென்ற போலீசார் நடவடிக்கை எடுக்காததற்காக அவர்களும் சிக்கலில் சிக்க உள்ளனர். கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டை மீறி நடந்த இந்தச் செயல் தொடர்பாக எதிர்காலத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் மிக கடுமையாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
