சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவக்குமார், நேற்று  மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து, அவர் சென்ற இடத்தில் சரமாரியாக கத்தியால் வெட்டினர். எதிர்பாராத தாக்குதலில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததுடன், திருவேற்காடு போலீசார் உடனடியாக விரைந்து வந்து, சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவரது கொலையைச் சுற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்ததா என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் திருவேற்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  குற்றவாளிகளை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.