கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தாலுகா அலுவலகத்தில், பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க ரூ.3,500 லஞ்சம் கேட்ட இளநிலை உதவியாளர் ஜெய்கணேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் சந்தப்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற 18 வயது மாணவிக்கு பிறப்பு சான்றிதழில் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆதார் கார்டில் பிறந்த தேதியை திருத்த முடியாமல் இருந்த நிலையில், அவரது மாமன் வெங்கடாசலம், ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவகத்தில் சான்றிதழை திருத்த முயற்சி செய்தார்.

வெங்கடாசலம் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஊத்தங்கரை தாலுகா அலுவகத்தை சென்றடைந்து, தனது அக்கா மகள் பெயரை பிறப்பு சான்றிதழில் சேர்க்க விண்ணப்பம் தாக்கல் செய்தார்.

அதற்காக அரசு முறைப்படி ரூ.200 செலுத்தியும், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தபோதும், ஜெய்கணேஷ் என்ற இளநிலை உதவியாளர், பெயர் சேர்க்க ரூ.4,500 கேட்டதாக கூறப்படுகிறது. வெங்கடாசலம் அதை மறுத்தபோதும், லஞ்சத் தொகையை ரூ.3,500க்கு குறைத்தும், பணம் கொடுத்தால் வேலை முடியும் என நிர்பந்தித்துள்ளார்.

இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடாசலம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலத்தில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் பூசப்பட்ட பணத்தை ஜெய்கணேஷிடம் கொடுத்தார்.

அந்த நேரத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென வந்து, ஜெய்கணேஷை பணத்துடன் கையும் களவுமாக கைது செய்தனர். அவரது மேஜையில் இருந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இச்சம்பவம் ஊத்தங்கரை தாலுகா அலுவகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.