இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் என்பது அதிக அளவில் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து ரூ. 2 கோடி ஊழல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் மகாத்மா காந்தி கிராம நிர்மாண், ஆனந்த் கடி கிராமோதியோக், வசுந்தரா சர்வஜனிக், கம்தார் கல்யாண மண்டல் போன்ற அறக்கட்டளைகள் வழியாக 1906 கழிப்பறைகள் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை நகராட்சி தெரிவித்த நிலையில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பிரவீன் மோடி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 1906 கழிப்பறைகள் கட்டப்படவில்லை என்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் திருமண சான்றிதழ்களை பெறுவதற்காக கொடுக்கப்பட்ட ஆவணங்களை வைத்து கழிப்பறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்து நிதியை பெற்றுள்ளனர் என்றும், மேற்சொன்ன 5 நிறுவனங்களும் சில அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து ஊழல் நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாக குஜராத் நகர நிதி வாரியம் நிதி பெற்றுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அங்கலேஷ்வர் நகராட்சியிடம் விவரங்களை கேட்டபோது, பெரிய வீடுகள் மற்றும் பங்களாக்களில் வசிக்கும் மக்கள் கழிப்பறைகள் கட்டுவதற்கு உதவி நிதி தொகையை பெற்றுள்ளதாக ஆவணங்களில் இருந்தது.

அதனை கண்டு நான் அதிர்ச்சியடைந்ததும், அவர்களிடம் சென்று கேட்டபோது நாங்கள் அதற்காக விண்ணப்பிக்கவில்லை என்று கூறினர். இதைத் தொடர்ந்து இரு மதங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு அந்த கழிப்பறை கட்டப்பட்டதற்கான நிதி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்தது. எப்படி இரு மதங்களை சேர்ந்த குடும்பங்கள் ஒரே வீட்டில் வாழ முடியும்? எனவே இதில் மக்களின் ஆவணங்கள் திருடப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக எல்லா இடத்திலும் நான் புகார் கொடுப்பேன்” என்று கூறினார்.