தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்கள் கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ளன. இந்த முகாம்கள், அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை ஒரே இடத்தில், ஒரே நாளில் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் வரை 10,000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அரசு சேவைகள் ஒரே இடத்தில் – அலைய வேண்டாம்!
பொதுமக்கள் பட்டா மாற்றம், சிட்டா திருத்தம், பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஜாதி, வருமான, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் போன்றவற்றுக்காக பல துறை அலுவலகங்களில் அலைய வேண்டிய நிலையை தவிர்க்கும் வகையில், இம்முகாம்கள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்குகின்றன. ரேஷன் கார்டு முகவரி மாற்றம், ஆதார் கார்டு திருத்தம், புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் அப்டேட் போன்ற சேவைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
மகளிர் உரிமைத் தொகைக்கு நேரடி விண்ணப்ப வசதி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகைக்கு, தகுதியான பெண்கள் இம்முகாம்களில் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். ஆதார், ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்களுடன் முகாமுக்கு சென்று விண்ணப்பித்து விட்டால், 45 நாட்களுக்குள் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
மருத்துவ காப்பீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவைகள்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உறுப்பினராக சேர விரும்பும் குடும்பங்கள், இம்முகாம்களில் ரேஷன் அட்டை, வருமான சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் விண்ணப்பித்து, 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு பாதுகாப்பு பெறலாம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், உதவித்தொகை, சக்கர நாற்காலி, செயற்கை கருவிகள், சுயதொழில் கடனுதவி போன்றவையும் இந்த முகாம்களில் வழங்கப்படும்.
முகாம்கள் எங்கு நடைபெறுகிறது என்பதை எளிதாக அறியலாம்
பொதுமக்கள் தங்களது ஊரில் எங்கு இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள, அரசு https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதில் மாவட்டம், தேதி மற்றும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மக்களின் தேவைகளை நேரடியாக நிறைவேற்றும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக அரசு இம்முகாம்கள் மூலம் மக்களிடம் நேரடியாக சென்று நம்பிக்கை பெற முயற்சி செய்கிறது. அரசு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெற விரும்பும் பொதுமக்கள், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
