சென்னை அண்ணாநகர், கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் (வயது 53) கடந்த மாதம் 10ஆம் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.
அதிகாலை அந்த பகுதியில் வந்த மர்ம நபர் ஒருவர், நவீன கருவிகளை பயன்படுத்தி அந்த காரை வெறும் சில நிமிடங்களில் திருடிச்சென்றார். கார் காணாமல்போனதை அறிந்த எத்திராஜ் அதிர்ச்சியடைந்து, வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபின், சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை ஆரம்பித்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் திருடனை கண்டறிந்தனர். பின்னர் வந்த தகவலின் பேரில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த அந்தக் கார் திருடனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அந்த நபர் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் (வயது 43) எனவும், எம்.பி.ஏ. பட்டதாரி என்றும் தெரியவந்தது. மேலும், இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, கடந்த 20 ஆண்டுகளாக இவர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சொகுசு கார்கள் திருடி வந்ததுடன், தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட கார்களை திருடியுள்ளதாக கூறியுள்ளார். நவீன கருவிகள் மூலம் பாஸ்வேர்ட் அல்லது கீ லெஸ்ஸ் கார்களை எளிதில் திறந்து, அந்த கார்கள் அனைத்தையும் நேரடியாக சாலை வழியாக ராஜஸ்தான் மற்றும் நேபாள பகுதிக்கு கடத்தி விற்று, அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானவுடன், கடந்த காலங்களில் தனது கார்களை இழந்த 10-க்கும் மேற்பட்ட வர்கள் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து தகவல்களை தெரிவிக்க, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது சட்டேந்திரசிங் ஷெகாவத் மீது தொடர்ச்சியான கார்கள் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
