நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் 10 வயது மகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மிகுந்த சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த ஆசிரியர் அந்த சிறுமியை தனியாக அழைத்து பேசியுள்ளார்.

அப்போது கடந்த கோடை விடுமுறையில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்ற 30வயதுடைய நபர் தன்னை தேயிலை தோட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்ட ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து உடனே சிறுமியின் பெற்றோருக்கும் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பெயரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு ஊட்டி மகிழா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம். செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

அதில் அரசு தரப்பில் பி. செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 15,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து சுப்பிரமணி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.