கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகே ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் மரிய ஆரோக்கியம்- சகாய மலர் (52). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் 2 மகன்கள் காதல் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது மகனுக்கு நல்ல முறையில் பெண் பார்த்து உறவினர்கள் அனைவரையும் அழைத்து தடபுடலாக திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவில் சகாய மலர் இருந்துள்ளார்.

ஆனால் அவரது மூன்றாவது மகனும் ஒரு பெண்ணை திடீரென காதல் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த சகாய மலர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

உடனே கவனித்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சகாய மலரை அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாய மலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அஞ்சு கிராமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்களின் காதல் திருமணத்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.