இலங்கையின் தம்புள்ளை மைதானத்தில் இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்று பெரும் சர்ச்சையில் முடிந்துள்ளது. இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இப்போட்டியின் கடைசி பந்தில், இலங்கை பேட்ஸ்மேன் ஷாட் அடிக்க முயற்சி செய்யாத போதும் நடுவர்கள் ‘லெக்-பை’ ரன் வழங்கியதால் ஆட்டம் சமனில் (Tie) முடிந்தது. இதற்கு இந்திய கேப்டன் திலக் வர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், மாலை 6 மணிக்கு மேல் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், விதிமுறைப்படி பிளட் லைட்டுகளைப் பயன்படுத்த முடியாததாலும் போட்டியைச் சமன் செய்வதா அல்லது சூப்பர் ஓவர் நடத்துவதா என்பதில் நடுவர்கள் காட்டிய காலதாமதம் இந்திய அணியினரை பெரும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் நடுவர்களின் குளறுபடிகள் தொடர்ந்தன.

இலங்கை அணி பேட்டிங் செய்து முடித்ததும், இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில், மூன்றாவது நடுவர் அதை ‘நோ-பால்’ என அறிவித்ததால் வீரர்களை மீண்டும் நடுவர்கள் மைதானத்திற்குள் அழைத்தனர். இதனால் கோபமடைந்த கேப்டன் திலக் வர்மா நடுவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியாக 17 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, இலங்கை வீரர் குஹாதாஸ் மதுலனின் சுழலில் சிக்கி 9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இத்தோல்வியைக் கொண்டாடிய இலங்கை வீரர்களுக்கும், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே மைதானத்திலேயே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டு, பின்னர் அது தள்ளுமுள்ளாக மாறியது. சக வீரர்கள் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, இறுதியில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி சமாதானமாகச் சென்றாலும், இப்போட்டி இந்தத் தொடரின் மிக உக்கிரமான சர்ச்சைப் போட்டியாக மாறியுள்ளது.