ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா (68 ரன்கள்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், இறுதியில் ரிச்சா கோஷின் அதிரடியாலும் (34 ரன்கள்) இந்திய அணி 170 ரன்கள் குவித்தது. 171 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவின் சுழலில் சிக்கி சீர்குலைந்தது. தீப்தி சர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 106 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியைச் சந்தித்தது. தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தையும், வீரர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது கிரிக்கெட்டில் நமது நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் கிரிக்கெட் மற்றும் அண்டர்-19 என எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி, எந்த ஒரு பார்மேட்டிலும் நம்மால் இந்தியாவை வீழ்த்த முடிவதே இல்லை. இது நமக்கு மிகப்பெரிய அவமானம். இப்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது; டிவியில் கமெண்டரி செய்யக்கூட பயமாக இருக்கிறது. கிரிக்கெட்டில் நாம் இந்தியாவை விட ஆயிரம் மடங்கு பின்தங்கியுள்ளோம்” என பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து தனது குமுறலையும் ஆதங்கத்தையும் அக்தர் வெளிப்படுத்தியுள்ளார்.
