கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபீஷ் பி. டொமினிக். இவர் ஒரே கையை பயன்படுத்தி, வெறும் ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்களை உடைத்து, உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், கடந்த 14 ஆண்டுகளாக சாதனையாக இருந்த ஜெர்மனியைச் சேர்ந்த முகம்மது கஹிரிமனோவிச்சின் 118 தேங்காய்கள் சாதனையை முறியடித்து, கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கான வீடியோ, கின்னஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், அபீஷ் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உற்சாக குரல்களை பின்னணியாகக் கேட்டுக்கொண்டும், கடினமான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டும், ஒரே கையால் வரிசையாக வைக்கப்பட்ட தேங்காய்களை அதிரடியாக உடைப்பது காணப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்களை உடைத்த அவர், இரண்டே தேங்காய்களை ஒரு வினாடியில் உடைக்கும் வேகத்துடன் சாதனை முடித்துள்ளார். இந்த சாதனையைப் பற்றிக் கூறிய அபீஷ், “நான் ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவன். கின்னஸ் உலக சாதனை என்பது எங்களுக்கே ஒரு கனவுதான். ஆனால், மன உறுதியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். அதனை என் வாழ்க்கையால் நிரூபித்துள்ளேன்,” என கூறியுள்ளார்.

முன்னதாக, 2005 முதல் 2011 வரை இந்த வகை சாதனையை ஐந்து முறை முறியடித்து, தேங்காய் உடைப்பில் ஆதிக்கம் செலுத்தியிருந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த முகம்மது கஹிரிமனோவிச். அவர், 65 தேங்காய்களிலிருந்து 118 வரை தனது சாதனையை உயர்த்தி வைத்திருந்த நிலையில், தற்போது அபீஷ் டொமினிக் 122 தேங்காய்களுடன் புதிய வரலாறு படைத்துள்ளார். இது கேரள மக்களுக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தும், ஊக்கமும் அளித்தும் இருக்கிறது.