கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில், வழக்கமாகவே கடும் போக்குவரத்து நெரிஸல் காணப்படும். இதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், டிராபிக் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைச் சுட்டிக்காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“Travel and Food Vlogs” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பெங்களூர் விமான நிலையத்தில் தனது தோழியை துபாய்க்கு வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவர், தனது தோழி துபாய் சென்றடைந்த பிறகும், தான் இன்னும் பெங்களூரு டிராபிக்கில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் பதிவிட்ட வீடியோவில் நீண்ட வாகன வரிசைகள் தெளிவாகக் காணப்பட்டன. மேலும், “துபாய்க்கு சென்ற என் தோழி அவ்வளவு நேரத்தில் தனது இலக்கை அடைந்துவிட்டார். ஆனால் நான் இன்னும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன். இது உண்மை சம்பவம்.

பெங்களூரில் யாராவது இருந்தால், இந்த உண்மையைப் பகிருங்கள்” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அதில் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து, “நாங்களும் இதையே அனுபவித்துள்ளோம்” எனக் கூறி வருகிறார்கள்.

இந்த வீடியோவை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து, பெங்களூர் டிராபிக்கின் மோசமையை விளக்கும் விதமாக கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். ஒருவர், “என் பெற்றோர் என்னை ஏர்போர்ட் வரவழைத்து விட்டுவிட்டு வீடு திரும்பும் போது, நான் டெல்லியில் தரையிறங்கிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “நான் மாலத்தீவிலிருந்து வந்தேன். என் நண்பன் ஏர்போர்ட் வரும்போது வீட்டிலிருந்து கிளம்பினார். ஆனால் நான் லக்கேஜ் எடுத்து வெளியே வந்த பிறகும் அவர் இன்னும் டிராபிக்கில் இருந்தார்” என பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில், சில நெட்டிசன்கள் இது உண்மையல்ல, வெறும் விளம்பர நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட வீடியோ என விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். “ஏர்போர்ட்டுக்கு 3 மணி நேரம் முன்பே கிளம்பவேண்டும் என்பதே நடைமுறை.

அந்த நேரத்தை சேர்த்தாலும், ஹெப்பால் வரை 6 மணி நேரமா? இது சாத்தியமில்லாதது” எனக் கூறி, உண்மை இருப்பதாக விமர்சித்துள்ளனர். இருப்பினும், பெங்களூரின் போக்குவரத்து சிக்கல் குறித்து மீண்டும் விவாதம் எழுந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.